
டிசம்பர் 19, மதியம், கானௌரி எல்லையில் மேடை நிகழ்ச்சிகள் திடீரென நிறுத்தப்பட்டன. சில நிமிடங்களில் மேடை காலியானது.
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்த விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவர்கள் உட்பட ஒட்டுமொத்த மருத்துவப் பணியாளர் குழுவும் அங்குமிங்கும் ஓடியது.
சிலர் கோபமாகவும், சிலர் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். சிறிது நேரம் கழித்து, குர்பானி மேடையில் இருந்து முழக்கமிடத் தொடங்குகிறது. தல்லேவால் குணமடைய, கூட்டத்தினர் பிரார்த்தனை செய்வதையும் காண முடிந்தது.
பிற்பகலில் பாரதீய கிசான் யூனியன் (சித்துப்பூர்) மாநில பொதுச் செயலாளர் காக்கா சிங் கோத்ரா, மேடையில் பேசும் போது, ஜக்ஜித் சிங் தல்லேவாலின் இரத்த அழுத்த அளவு மிகவும் குறைந்துவிட்டதாகவும், அவர் சிறிது நேரம் சுயநினைவு இழந்ததாகவும் கூறினார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் உள்ளது.
தல்லேவாலின் விவசாய இயக்கப் பயணம்

பட மூலாதாரம்,Getty Images
பாரதிய கிசான் யூனியனின் (சித்துபூர்) மாநிலத் தலைவரும், ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் தலைவருமான ஜக்ஜித் சிங் தல்லேவால், பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள தல்லேவால் கிராமத்தில் வசிப்பவர்.
70 வயதான ஜக்ஜித் சிங் தல்லேவால், புற்றுநோயால் அவதிப்பட்டாலும், விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
பாரதிய கிசான் யூனியனின் (சித்துப்பூர்) மாநில பொதுச் செயலாளரான காக்கா சிங் கோட்ராவின் கூற்றுப்படி, தல்லேவால் 1982-83 ல் கிசான் யூனியனில் செயல்படத் தொடங்கினார்.